3 குழந்தைகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருடைய மனைவி பிரியதர்சினி, இவருக்கு வயது 36. மேலும் ராமதாஸ்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கு, 16 வயதுள்ள பர்வதவர்த்தினி என்ற மகளும், நீலகண்டன் (15), மற்றும் ஜெய் ஹரிகிருஷ்ணன்(11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ராமதாசின் பெரியம்மாள் வசந்தி(75) என்பவரது வீட்டின் மாடியில் இவர்கள் வசித்து வந்துள்ளார்கள்.
ராமதாஸ் இறந்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறுமாறு பிரியதர்சினியிடம், வசந்தி வற்புறுத்தி வந்துள்ளாராம். இதனால் வசந்தி மற்றும் பிரியதர்சினிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் காரைக்குடி தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் வசந்தியின் தம்பி ராஜேந்திரன் அங்கு வந்து வசந்திக்கு ஆதரவாக பேசி, பிரியதர்சினியிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த பிரியதர்சினி தனது 3 பிள்ளைகளுக்கும் காபியில் விஷம் கலந்துகொடுத்து, அவரும் சேர்ந்து குடித்துள்ளார். அதன்பின்னர் 4 பேரும் வீட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி வந்தனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பிரியதர்சினியின் தாய் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பின் பிரியதர்ஷினி மற்றும், அவருடைய மகள் மற்றும் 2 மகன்களும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பிரியதர்சினி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகள், மகன்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.