சென்னை கிண்டியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதுதொடர்பாக சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்யததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்தபோது இந்த தகவலை தனது தாயிடம் தெரிவித்தபோது, கருவை கலைத்த அவர் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் குற்றவாளியான தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.