கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
குடி போதைக்கு அகில் அடிமையாகியுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அகிலின் தந்தை 6 பேர் கொண்ட கூலிப் படையை ஏவிவிட்டு தனது மகனை கொலை செய்ய சொன்னார். அதன்பின் அகிலை படுகொலை செய்த கூலிப்படை, அன்றைய தினம் காலகத்கி பகுதி அருகில் தேவிகொப்பா எனும் இடத்தில் கரும்பு தோட்டத்திற்குள் அவரது உடலை புதைத்துவிட்டு தப்பிசென்றனர். இதுகுறித்து பரத் அளித்த வாக்குமூலத்தின் படி உடனடியாக 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மீதம் உள்ள 3 பேர் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.