பெலாரஸ் போராட்டம் பற்றி ஐ.நா. விசாரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் மூலமாக அலெக்சாண்டர் தொடர்ந்து 6-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் அதனால் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வியட்லானா கூறினார்.
அதன் பிறகு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு நகரங்களில் வீதிகளில் இறங்கி போராடத்தில் ஈடுபட்டனர். 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்து கொண்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக தற்போது வரை 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெலாரசில் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக குற்றம் சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, இது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.வை வலியுறுத்திஇருக்கிறது. மேலும் அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான சக்தியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பெலாரஸ் காவல்துறையினருக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புவேண்டுகோள் விடுத்துள்ளது.