திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்து பேசிய திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி பேசுகையில், நிதியே கிடையாது என்று சொல்லக்கூடிய நிலையில் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களை உறுப்பினர்களும் நின்று கொண்டிருக்கிறோம். எந்த காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையோ அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியை உயர்த்த பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு அதிகாரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நாங்கள் எல்லா உரிமைகளையும் வைத்து இருப்போம் என்று நினைக்கக்கூடிய ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து விட்டது. இந்த நேரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மக்களின் அடிப்படை தேவையை புரிந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.