நண்பனை மது பாட்டிலால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் தனது நண்பர்களான ஜீவா, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 பேரும் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென தர்ஷனுக்கும் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜீவா சண்டையை தடுக்க வந்த சந்துருவை பாட்டிலை கொண்டு சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்துருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜீவாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.