புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.
இதனையடுத்து போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமே மொத்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. விவசாயத் திட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற விவசாயிகளின் பிரதிநிதிகள் அரசிடம் தெரிவித்துள்ளனர். அதனால் விவசாயிகளுடன் மீண்டும் டிசம்பர் 5-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து 40 விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஏழு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களில் 8 திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசு வழங்கிய தேநீரை கூட விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.