வாக்குப்பதிவு மையம் அருகே இருந்த திமுக பேனரை காவல் துறையினர் அகற்ற கூறியதால் அதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இருபத்தி ஆறாவது வார்டில் அஸ்ரா சுல்தானா என்பவர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே இவரை ஆதரித்து அப்பகுதியில் உள்ள தேர்தல் வாக்கு சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் திமுகவின் பிரச்சார பேனர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் வாக்கு பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களின் பெயர்களோ அல்லது அவர்களின் சின்னங்களோ இருக்கக் கூடாது என்பது தேர்தலின் விதி.
எனவே இவற்றை அகற்ற கூறி காவல்துறையினர் கூறிய நிலையில் வேட்பாளரின் கணவர் இக்ரம் அஹமது 50க்கும் மேற்பட்ட திமுகவினருடன் இணைந்து சாலையில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கலைந்து சென்றனர்.