புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியை சேர்ந்த தம்பதி ரெங்கசாமி – வள்ளி. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்தவரான பாலசுந்தர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த பாலசுந்தர் வெளியில் யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருடனும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரெங்கசாமி மகனுக்கு பேய் பிடித்துள்ளது என்று எண்ணி பூசாரி ஒருவரை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதை அறிந்த பாலசுந்தர் தாய், தந்தை இருவரையும் கட்டையால் அடித்தும் குத்தியும் கொன்றுள்ளார். அந்த சமயம் அவர்கள் வீட்டில் பால் கறக்க வந்த ஒருவர் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் பாலசந்தரிடம் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது, “நான் கேட்டரிங் படித்துவிட்டு வெளியூரில் வேலை பார்த்து வந்தேன். எனக்கு வேலை பிடிக்காத காரணத்தினால் அப்பா அம்மாவுடன் சேர்ந்து இருப்பதற்காக வீட்டிற்கு வந்தேன். ஆனால் அவர்கள் என் மீது அக்கறை கொள்ளாமல் தினமும் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். இது எனக்கு அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் எனக்கு பேய் பிடித்துள்ளது என்று கூறி பூசாரியை வரவழைத்தது மேலும் எனக்கு வெறுப்பை உண்டாக்கியது. இதனால் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். வீட்டில் இருந்த எனது அம்மாவின் பின்மண்டையில் கட்டையால் அடித்து கழுத்தில் குத்தி கொன்றேன். பிறகு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த எனது அப்பாவை அழைத்து அதேபோல் கட்டையால் அடித்தும் கழுத்தில் குத்தியும் கொன்றேன்” என்று வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் பாலசந்தரை கோர்ட்டில் ஆஜர்செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.