2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவை,
- சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதான சந்திப்புகளில் ரூ.500 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
- தஞ்சாவூர் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர் அமைக்கப்படும்.
- 28 மாவட்டங்களில் 77 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் அமைக்கப்படும்.
- 5 மாவட்டங்களில் 9 இடங்களில் நகர்ப்புற ஏரிகள் புனரமைக்கப்படும். குறிப்பாக மாதவரம் ஏரி பெருமாள் ஏரி வாலாஜா ஏரிகள் புனரமைக்கப்படும்.
- தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் பாசன நீர் வற்றி திட்டங்கள் ரூ. 486 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சாலை மேம்பாட்டு பணிகள், வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு பணிகள் ரூ. 531 கோடியில் நடைபெற உள்ளது.
- சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரை 14 கிலோமீட்டர் சாலை 6 வழிசாலையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் ரூ. 350 கோடியில் சேவை சாலைகளுடன் கூடிய ஆறு வழி சாலையாக மாற்றப்படும்.
- சென்னையில் வெள்ளப்பெருக்கினால் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தவிக்க ரூ. 277 கோடியில் புதிய வடிகால், சிறுபாலங்கள் கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.