Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேரிடர் கால முன்னேற்பாடுகள்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பல்வேறு கட்ட நடவடிக்கைகள்…!!

பேரிடர் கால முன்னேற்பாடுகள்  குறித்துமாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால்  ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.  இந்த கூட்டத்தில்  தமிழக அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்து உள்ளார்.

இந்த கூட்டத்தைப் பற்றி பீலா ராஜேஷ் கூறுகையில்,  பேரிடர் காலத்தில் மின்வெட்டு, மரங்கள் சாலையில் விழும்போது மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.  இதற்காக பொக்லைன் இயந்திரங்கள், படகுகள், மணல் மூட்டைகள், மற்றும் மரங்கள் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில்வைத்துக்கொள்ளவேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 47  நிவாரண முகாம் மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2994 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சியின் ஒத்திகை அளிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால் பணியானது 90% முடிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும் .

வனவிலங்குகளுக்கு பாதிப்பு  ஏற்படாதவாறு வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  பொதுமக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தொற்று ஏற்படாதவாறு முகாம்களில் தனிநபர் இடைவெளியில் தங்க வைத்து உணவு,உடை, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து முதன்மை செயலாளர்  பீலா ராஜேஷ் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையம், கொரோனா தடுப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.  பின்பு தேவ சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிகமான நிவாரண முகாம்  மையத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டுள்ளார்.  இந்த ஆய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

Categories

Tech |