திமுக அரசு பேரிடர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர் கட்சி துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றும் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள சமயத்தில், நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அன்பரசன் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அன்பரசன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வினோத்குமாரின் உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் பணியை அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பி உதயகுமார், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என அம்மா ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தந்தார். இதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட நாள் கழித்து பேசியுள்ளார். நம்முடைய எடப்பாடியார் 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வருகிறார். ஆகவே முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும். இந்நிலையில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேரில் இருவர் உயிரிழந்ததோடு, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருவது வேதனையை தருகிறது.
நம்முடைய நாட்டிற்காக சேவையற்றும் ராணுவ வீரர் ஆற்றில் குளிக்க சென்ற போது அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் எப்படியாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று நாம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம். இது போன்ற மழைக்காலங்களில் ஆற்றில் ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ, குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் நாங்கள் அறிவுறுத்தினோம். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்து அரசாங்கம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிப்புகள் குறித்து அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இபிஎஸ் அறிவுறுத்தி வருகிறார். மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர் நடவடிக்கைகளை அரசு முறையாக எடுக்காத காரணத்தினாலே உயிர்ப்பலிகள் நடைபெறுவதாக கூறினார்.