தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் செல்வராஜ்-கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நந்தகுமார் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த நந்தகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நந்தகுமாரின் தாயார் தனியார் பேருந்தின் ஓட்டுனர் அதி வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.