Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த மாவட்ட ஆட்சியர்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…. அரசு அலுவலர்களுக்கு அறிவுரை…!!

மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் பயணித்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களால் காற்று மாசடைவதை தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் சைக்கிள், பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனது முகாம் அலுவலகத்திலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் 5 நிமிடம் பேருந்துக்காக காத்திருந்து, அரசு பேருந்தில் பொதுமக்களுடன் நின்றபடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பயணித்துள்ளார். 1 1/2 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணித்த ஆட்சியர் மயூரநாதர் கீழவீதி பேருந்து நிலையத்தில் இறங்கி தனது அலுவலகத்திற்கு 250 மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், காற்று மாசு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாகவும், அதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு அலுவலர்கள் வாரத்திற்கு 1 நாள் தனி வாகனத்தில் செல்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தியோ அல்லது நடந்தோ தங்களது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் லலிதா பேருந்தில் தனது அலுவலகத்திற்கு சென்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியோ, சைக்கிளிலோ அல்லது நடந்தோ அலுவலகத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார். பேருந்துக்காக மாவட்ட ஆட்சியர் காத்திருந்து, நின்று கொண்டே பயணம் செய்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

Categories

Tech |