அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை கடந்த 3ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது.முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் எளிதாக புக்கிங் செய்யும் வகையில் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது.
இந்நிலையில், காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் அதிகளவு பார்சலில் செல்கின்றன. ஆரம்பத்தில் தினமும் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது, “அரசு விரைவு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்புதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் படிப்படியாக பார்சல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பார்சல் அனுப்புகிறார்கள். குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. சேலத்தில் இருந்து பன்னீர் பார்சல் அதிகமாக செல்கின்றன. பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.