பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வழங்கும் போது அவற்றை கண்டக்டர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு உரிய டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றறிக்கையின் மூலமாக அது மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு காரணத்திற்காகவும் பயணிகள் அளிக்கும் நாணயங்களை பெற்றுக் கொள்ள கண்டக்டர்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது. அதை மீறி மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து கிளை, உதவிகிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் போன்றோர் கண்டக்டர்களுக்கு தெளிவாக கூறி, அவர்களிடம் கையெழுத்து வாங்கி இனிவரும் காலங்களில் இது போன்ற புகார்கள் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.