ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் கழிவு நீரை மழை நீர் ஓடையில் விடக்கூடாது எனவும், உறிஞ்சுழி அமைத்து அதில் கழிவு நீரை விடுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் கொடுங்குளம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜன் என்பவரின் வீட்டு கழிவு நீரை ஓடையில் விடக்கூடாது என நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து கழிவுநீர் மழை நீர் ஓடையில் வெளியேறியதால் நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் பாயும் குழாயை சிமெண்ட் மூலம் அடைத்தனர்.
இதனை கண்டித்து ராஜன் மார்த்தாண்டம் சந்திப்பில் நின்று பேருந்துகளை போக விடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ராஜனை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து உரிய தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் ராஜனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.