தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பண்டசோழநல்லூர் பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிச்சைமுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக இரவு 11 மணி அளவில் பிச்சைமுத்து செல்லப்பாக்கம் கூட்டு சாலை அருகில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பிச்சைமுத்துவை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பிச்சைமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.