பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் அழகுதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அழகுதுரை தனது நண்பர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான மூர்த்தி என்பவருடன் மொபட்டில் ஆவடி நோக்கில் புறப்பட்டுள்ளார். இவர்கள் ஆவடி பேருந்து நிலையம் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த டிப்பர் லாரி மொபட்டில் உரசியது. இதனால் லாரிக்கும் பேருந்துக்கும் நடுவில் சிக்கிய மொபட்டில் இருந்து 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அழகுதுரை பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் மூர்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் டிப்பர் லாரி உரசியதால் மொபட் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மொபட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி ஓட்டுநரான முனுசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.