பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு பேருந்தில் 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்படும்.
அதேபோல் ஆட்டோ கட்டணம் 1.5 கிலோமீட்டருக்கு 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும். ஐந்து கிலோமீட்டர் வரையில் கூடுதல் கிலோ மீட்டருக்கு 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 1500 சிசி க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 200 லிருந்து 225 ரூபாயாகவும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 17 இல் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.