கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மகாகாளியம்மன் கோவில் வீதியில் மருதாச்சலம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மருதாசலம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியது.
அப்போது மருதாச்சலம் துரிதமாக செயல்பட்டு பேருந்த இடது புறமாக திருப்பி சாலையோரம் இருந்த திருமண மண்டபம் சுற்றுச்சுவர் மீது மோதி நிறுத்தியதால் பயணிகள் அச்சத்தில் அலறி சத்தம் போட்டனர். இதனை அடுத்து மருதாச்சலத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருதாசலம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.