சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச் சேரி, தனபால் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ரோம்பேட்டை நேருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ பங்கேற்றார். அத்துடன் கலை நிகழ்ச்சியில் மாணவி கலந்துகொண்டார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ தன் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
இதையடுத்து அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் வந்த போது, பின்னால் பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற மாநகர பேருந்து மாணவி மீது மோதியது. இதனால் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த மாணவி லட்சுமி ஸ்ரீயின் தலையில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவி லட்சுமி ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற உடன் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். அதனை தொடர்ந்து பலியான மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாநகர பேருந்து டிரைவர் தேவகுமார்(49) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.