பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், பழனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் செல்வதற்கு சிறிய ஓட்டை ஒன்றும் இருக்கிறது. ஆனால் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஓட்டை கண்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில் குழந்தையுடன் சென்ற ஒரு பெண் திடீரென தடுமாறி விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டையில் வலை அமைக்க வேண்டும் எனவும், உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.