தமிழகத்தில் பேருந்து முதல் ரேஷன் கடை வரை பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் தருவதற்கு இதுதான் காரணம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறது. யாரும் யாரையும் மிரட்டி பார்க்க முடியாத அளவிற்கு சட்டம் கடுமையாக உள்ளது. நாம் அனைவரும் தற்போது நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு முதல்வர் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து வருகிறார்.
அடுத்து 20 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான். முதல்வராக ஸ்டாலின் தான் இருப்பார். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதற்கு முதல்வர் கடுமையான பணி மேற்கொண்டு வருகிறார். பேருந்து முதல் நியாயவிலை கடைகள் வரை தாய்மார்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு காரணம் தாய்மார்கள் முறையாக வாக்களிக்கிறார்கள். ஆண்கள் வெளியில் இருந்தால் ஒரு மாதிரியாகவும், உள்ளே ஏதாவது இறங்கி விட்டால் வேறு மாதிரியாக வாக்களிப்பார்கள். ஆனால் தாய்மார்கள் சொன்ன சொல் தவறாமல் வாக்களிப்பார்கள். இதன் காரணமாக பெண்கள் சிறப்பான எதிர்காலம் பெற வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்காக முதல்வர் பாடுபட்டு வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.