புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை சிறை பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணிகளிடம் 30 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கியதுடன் மற்ற பேருந்தை விட 4 ரூபாய் அதிகமாக வாங்குவதால் அதிர்ச்சி யடைந்த பயணிகள் நடத்துனரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் நடத்துனர் முறையாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தி சிறை பிடித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை களைந்து செல்லுமாறு கூறி பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடத்துனரிடம் விசாரணை செய்த போது முதலாளியிடம் தெரிவித்து சரி செய்வதாக கூறியதால் காவல் துறையினர் பேருந்தை விடுவித்துள்ளனர்.