பேருந்தில் வைத்து தங்க நகையை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள முத்துவீரப்பபுரத்தில் ஞானசவுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து உடன்குடி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த முத்துமாரி மற்றும் மீனாட்சி என்ற பெண்கள் கர்ப்பமாக உள்ளதாக கூறி ஞானசவுந்தரியின் அருகில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் ஞானசவுந்தரி ஆட்சி மடத்தில் இறங்கியபின் தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஞானசவுந்தரி தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அந்த பேருந்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் பேருந்தை மறித்து ஞானசவுந்தரியின் பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பெண்களிடம் நடத்திய சோதனையில் காணாமல் போன அவரது 8 பவுன் தங்க சங்கிலி கிடைத்துள்ளது. இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட அந்த 2 பெண்களையும் பிடித்து ஞானசவுந்தரி செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த காவல்துறையினர் 2 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.