பேருந்தை வழிமறித்து கேக் வெட்டி ரகளை செய்த வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து மாணவர்கள் ரகளை செய்தனர். இதனையடுத்து பேருந்தின் மேல் கூரை மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பேருந்து தினம் கொண்டாடியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட கண்டக்டர் வேலு என்பவர் மீது கேக்கை வீசி எறிந்துவிட்டு மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து 17 வயது பள்ளி மாணவன் மற்றும் 19 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.