ஒற்றை காட்டு யானை கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் காரப்பள்ளம் அருகில் யானைகள் தங்களது குட்டியுடன் கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும். இந்நிலையில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகில் ஒரு காட்டு யானை வந்துள்ளது.
இந்த காட்டு யானை அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டார். அதன்பிறகு காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடி அருகே வந்ததால் அச்சத்தில் பயணிகள் அலறி சத்தம் போட்டுள்ளனர். சிலர் யானையை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்டு யானை சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே நின்றதால் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.