யானை அரசு பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரப்பள்ளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது தாளவாடி நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானை மற்ற இரண்டு யானைகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.