யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வந்து விடுகிறது. நேற்று இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அப்போது மைசூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை இரண்டு காட்டு யானைகள் வழிமறித்தது.
இதனையடுத்து பேருந்தின் மேல் பகுதியில் கரும்பு உள்ளதா என யானை தும்பிக்கையால் தடவி பார்த்ததால் பயணிகள் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் யானைகள் காட்டுக்குள் சென்றது. அதன் பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.