ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த 43 வயதான நபர் தற்கொலை செய்து கொல்லப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் காவல் துறைக்கு அவசர மெயில் ஒன்றை அனுப்பியது. பின்னர் அந்த வீடியோவில் அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடம் டெல்லி ரஜோரி கார்டன் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் டெல்லி மேற்கு மற்றும் தென் மேற்கு மாவட்ட காவல்துறைக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் அந்த நபரின் வீட்டை 3.15 மணிக்கு கண்டுபிடித்தனர்.
அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக 1.30 மணிக்கு அறிவித்திருந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் அவரின் இடத்தை கண்டுபிடித்தனர். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் அரைகுறை மயக்கத்தில் விழுந்து கிடந்தார். பின்னர் அவரை மீட்ட காவல் துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மனைவி பிரிந்து சென்றதாலும், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினாலும் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் துணை கமிஷனர் தெரிவித்ததாவது: “அவர் 50 பாட்டில்கள் தைராய்டு சிகிச்சைக்கான டானிக்கை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஏனெனில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். கடந்த ஆண்டு அவருக்கு வேலை போய் விட்டது. இது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்ந்து உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் மன அழுத்தத்திலிருந்துள்ளார். மேலும் நேற்று காலை போபாலில் வசித்து வரும் தனது மனைவியை தொடர்பு கொண்டு நேரில் பார்க்க வரும்படி கூறியுள்ளார். ஆனால் மனைவி தான் வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பேஸ்புக்கில் லைவ் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் மீட்ட காரணத்தினால் அவர் உயிர் தப்பினார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.