மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த அமோல் சவான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 22 வயதான இளம்பெண்ணுடன், கடந்த 2013 ஆம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், கடந்த 2016 இல் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த இருவரும், வீட்டில் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மேலும், அமோல் பெற்றோர் கேட்ட அதிக வரதட்சணையையும் தருவதற்கும் பெண் வீட்டார் சம்மதித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2019 இல் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பிறகு, இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர். இச்சந்திப்பின் போது, அமோல் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என, அப்பெண்ணை மிரட்டி பல முறை தனிமையில் இருந்துள்ளார். இச்சம்பவம் பெண்ணின் பெற்றோர் கவனத்திற்கு வந்ததும், மாப்பிள்ளை குறித்து விசாரித்துள்ளனர்.
இதையறிந்த அமோலின் பெற்றோர் திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, மிகுந்த வேதனையிலிருந்த அப்பெண், தன்னை ஏமாற்றியவருக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அமோலை கைது செய்த காவல் துறையினர், அமோல் குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.