மத்தியப்பிரதேசம் மாநிலம் தாமோ பகுதியில் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டியதில் மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டி படேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம்கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளையமகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டிருக்கின்றனர். அப்போது சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்து விட்டதால், மோட்டியும், ராமும் சேர்ந்து சந்தோஷை தாக்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஆத்திரம் தலைக்கேறியதில் மோட்டி தன் மகன் சந்தோஷின் கையை ஒரு கட்டை மீது வைத்து கோடாரியால் வெட்டியதில் கை துண்டானது. இதனால் பதறிப் போன மோட்டி படேல், துண்டான கை மற்றும் கோடாரியுடன் அருகிலிருந்த போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று ரத்தவெள்ளத்தில் கிடந்த சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரத்த இழப்பால் சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து மோட்டி மற்றும் ராம் கைது செய்யப்பட்டுள்ளனர்.