செலவே செய்யாமல் விமானத்தில் நாட்டை சுற்றிய இளைஞரை தமிழரால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் குண்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு விமானத்தில் பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்காக அவர் நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி உள்ளார். ஆனால் விமானத்திற்கான பயண கட்டணத்தை அவர் செலுத்தாமல் தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளை செலுத்த செய்துள்ளார்.
ஆன்லைனில் பயணத்திற்கான டிக்கெட்டை குறைந்த விலையில் வாங்கும் தினேஷ் வேண்டுமென்றே விமானநிலையத்தில் அதனை தொலைத்து விடுகிறார். அதன் பிறகு சக பயணிகள் விமானச் சீட்டு தொலைந்து விட்டதாக கூறி அவர்களிடம் பணம் வாங்குகிறார்.
பின்னர் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு, கையில் இருக்கும் மீதி தொகையை செலவுக்கு வைத்துக் கொள்வாராம். இதேபோன்று பல இடங்களை சுற்றி வந்த தினேஷ் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் தனது வேலையை காட்டியுள்ளார். ஆனால் அவரிடம் ஏமாந்த அந்த மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தினேஷை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல உண்மைகள் தெரிய வந்தது. விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்திற்கு தான் முதன் முதலில் தனது பயணத்தை தினேஷ் தொடங்கியுள்ளார். அங்கிருந்து மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அங்கு நன்றாக ஊர் சுற்றி விட்டு மீண்டும் தனது பாணியில் அவர் ஊர் திரும்பியுள்ளார். இதற்கு சான்று அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் தான். தினேஷின் பெற்றோரிடம் விசாரித்ததில் அவர்களுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதுபோன்ற சீட்டிங் குற்றத்தில் தினேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.