திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனையடுத்து துணி பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த வேலுமணி பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தை பையில் இருப்பதை பார்த்த வேலுமணி செம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.