சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ரயிலில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 13 பேரை கைது செய்து 141 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் போலீஸ் விசாரணையில் கூலி பணத்திற்காக தான் அதிகமாக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கூலி பணம் கொடுக்கும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் ரயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் தனிப்படையினர் நேற்று அதிகாலை சேலம் வழியாக சென்ற வண்டி எண் 13351 கொண்ட தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் s6, s7 ஆகிய ரயில் பெட்டிகளை ஓன்று இணைக்கும் பகுதியில் யாரும் இல்லாமல் ஒரு பை மட்டும் கிடந்தது. உடனே காவல்துறையினர் அந்த பையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.