செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திரு ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்ற கழக அரசு தை பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பு நியாய விலை கடை மூலமாக வழங்கியிருக்கிறார்கள். அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம்பெறவில்லை.
பல்வேறு மாவட்டங்களில் 15 பொருட்கள், 17 பொருட்கள் அந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. அரசு அறிவித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களும் வழங்கப்படவில்லை, வழங்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. தரமற்ற பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். அந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் எடை குறைவாக இருக்கின்றன. முந்திரி பார்த்தீர்கள் என்றால் 50 கிராம் இருக்க வேண்டும், ஆனால் 35 கிராம் தான் இருந்தது.
திராட்சை 50 கிராம் இருக்க வேண்டும் 30 கிராம் தான் இருந்தது, இப்படி எல்லாமே எடை குறைவான பொருட்களை தான் நியாயவிலை கடை மூலமாக பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. மிகப்பெரிய முறைகேடு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் நடந்துள்ளது, மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்புக்கு மட்டும் கொள்முதல் செய்தது 1,300 கோடி, இந்த 1300 கோடி ரூபாயில் பொங்கல் தொகுப்பு கொள்முதல் செய்ததில் திமுக அரசாங்கம் முறைகேடாக, ஊழல் செய்ததாக அவர்கள் வழங்கப்பட்ட பொருட்களில் இருந்து தெரிய வருது.
எடை குறைவாக வழங்கப்பட்டது, தரம் குறைவாக உள்ளது, அதோட கரும்பு கொள்முதலில் மட்டும் கரும்பு 33 ரூபாய் என்று அரசு அறிவித்தது, ஆனால் கொள்முதல் செய்ததின் விலை உச்சபட்சமாக 16 ரூபாய் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு கரும்புக்கு கிட்டத்தட்ட 17 ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அப்படி கரும்பில் மட்டும் கிட்டத்தட்ட 34கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரியவருகிறது. அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் கொடுத்திருக்கிறார்கள் அதிலும் கலப்படம், எதையுமே உணவு பொருளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை.
அரிசி, கோதுமை, ரவை இதில் எல்லாம் பூச்சிகள் வண்டுகள் இருப்பதை வலைதளங்களில் காண முடிந்தது. அதோட புளியில் ஒரு பல்லி விழுந்து இருந்தது, அதை தெரிவித்தவர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு பதிந்து இருக்கிறார்கள். அதனால் அந்த குடும்பத்தில் அவருடைய மகன் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் தன் அப்பா மீது இப்படி ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை எண்ணி மனவேதனையில் தற்கொலை செய்திருக்கிறார்.
ஆக இந்த பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் ஒரு உயிரே போய்விட்டது, ஒரு உயிரை நாம் பலிகொடுத்து இருக்கிறோம். அதோட வெல்லம் வழங்குனாங்க, அந்த வெல்லம் வழங்கியதில் பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்மணி ஏற்கனவே ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் காட்டினேன், தூக்கிபிடித்தால் ஒழுகிக்கொண்டு இருக்கிறது, அவ்வளவு ஒரு தரமற்ற வெல்லத்தை கொடுத்திருக்கிறார்கள் அதெல்லாம் பொங்கல் வைப்பதற்கே லாயக்கற்றது.
பல்வேறு இடங்களில் இப்படித்தான் வெல்லம் கொடுத்து இருக்கிறார்கள், இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரிய பண்டிகை தைப்பொங்கல் பண்டிகை அந்த பண்டிகை இந்த ஆண்டு முழுமையாக மக்கள் கொண்டாட முடியவில்லை, அதில் கொடுத்த பொங்கல் தொகுப்பு அந்த அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் ஊடகத்தின் வாயிலாக தெரிவிக்க விரும்புகின்றேன்.