பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தாம்பரம்- நெல்லை, தாம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி- தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதலே ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால் பெரும்பாலான ரயில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டதால் முன்பதிவு தொடங்கிய ஏழு நிமிடங்களில் சிறப்பு ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்களும் விற்று முடிந்தது. வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே டிக்கெடுகளை முன் பதிவு செய்ய முடிந்தது. இதனால் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரில் காத்திருந்த மீதம் 95 சதவீதம் பேர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர்.