தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. இந்த கரும்புக்கு தமிழக முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் விளைந்துள்ள கரும்புகளை தமிழக அரசு கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.