தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பொங்கல் தொகுப்பில் வழக்கமாக வழங்கப்படும் கரும்பு பட்டியலில் இடம் பெறாமல் இருந்தது. அதனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படாதா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்பில் முழுக் கரும்பு இடம்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் 20 வகையான பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, தற்போது கரும்பு வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.