தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்க பணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2023 -ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதில் கரும்பு இடம்பெறவில்லை. இது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழக அரசு பரிசீலனை செய்து தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மனநிறைவோடும், சிறப்பாகவும் கொண்டாடும் விதமாக கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2,500 ரூபாயாவது உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் அனைத்து மக்களுக்கும் வேட்டி, சேலை வழங்கிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி இந்த பொங்கலை தித்திக்கும் பொங்கலாக அமைய அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.