கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதி சென்னையிலும்,அதேநாளில் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கூடுதலாக 71 கோடி செலவாகும் என்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக தெரிவித்தனர். எனவே ஏற்கனவே ஜனவரி 2ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவித்தனர். ஏற்கனவே டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய 5 நாட்கள் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.