தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்க இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வருகிற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதேபோல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி டோக்கன் விநியோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரக பகுதிகளில் 200 அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஜனவரி 2-ஆம் தேதியிலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருகிற 2-ம் தேதிக்கு பதிலாக 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது. அதனால் பொதுமக்கள் அவர்களது வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர வேண்டும்” என கூறியுள்ளார்.