பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக வழங்கும் வேஷ்டி மற்றும் சேலைகளை நெசவாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல் அரிசி, வெள்ளம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொள்முதல் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு. மேலும் இதுகுறித்து தமிழக கூட்டுறவு செயலாளர் மற்றும் தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் இந்த வழக்கு வருகின்ற 19-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என கூறியுள்ளனர்.