முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பரிசினை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஈடாக வருகிற ஜனவரி 27-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணத்தினை விற்பனை முனைய இயந்திரத்தின் மூலமாக கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்க வேண்டும். மேலும் அங்கீகாரச் சான்று வழங்கியதன் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்களை பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் கையொப்பம் வாங்கி பொங்கல் பரிசு வழங்க வேண்டும். கைரேகைசரி பார்த்து பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத சமயங்களில் அதற்குரிய பதிவேட்டில் உரிய கையொப்பம் பெற்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தினை வழங்க வேண்டும். எந்த காரணங்களுக்காகவும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட்ட உடன் அவர்களது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசு காரணமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படாத விதம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் பற்றிய புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1967 மற்றும் 1800 425 5901 போன்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.