ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அதில் 15 பொருட்கள் மட்டுமே இருந்தது.
அதுவும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் இந்த பரிசுத்தொகுப்பில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை கேட்ட முதல்வர் தவறு செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இந்த ஆண்டும் அந்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.