கோடைக்காலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் நமது சருமம் வறட்சியாக இருப்பதால் தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
பொடுகு தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
இதற்கு மாற்றாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், மூன்று டேபிள் ஸ்பூன் அளவிலான தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதனை தலையில் தடவி 10 முதல் 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் ஒரு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள். இந்த கலவையை தலை அரிப்பு மற்றும் வறட்சி நீங்கும் வரை தினமும் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு கப் வெந்நீரில், ஒரு கப் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடங்கள் வைக்கவும். வெந்நீர் அதிக சூட்டில் இருக்க வேண்டியதில்லை. அவை நன்றாக காய்ந்த பிறகு வெதுவெதுப்பான பிறகு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து விடுங்கள். பிறகு சிறிது சிறிதாக மஸ்லின் துணியில் சேர்த்து வடிகட்டுங்கள். நீர் வடிய சில நேரம் எடுக்கும். மொத்தமாக துணியில் போடாமல் சிறிது சிறிதாக ஊற்றி வடிகட்டி வையுங்கள்.
தலைக்கு ஷாம்பு போட்டு முடித்த பிறகு லேசான ஈரப்பதம் இருக்கும் போது இந்த ஓட்ஸ் பாலை உச்சந்தலை முதல் நுனிவரை ஊற்றி நன்றாக விரல்களில் கோதி விடவும். பின்னர் வெறும் நீரில் நன்றாக அலசி எடுக்கவும். இப்படி செய்தால் கூந்தல் அரிப்புகளை போக்கி பொடுகை மொத்தமாக வெளியேற்றும். உச்சந்தலையில் இறந்த சருமத்தை நீக்கி சரும ஆரோக்கியமும் கிடைக்கும்.