தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகின்ற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.
இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.