தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-31 ஆம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட வாரியாக முதன்மை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாணவர்கள் பொதுத் தேர்வில் கடைபிடிக்கவேண்டிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. (நாளை) மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வை 8, 37,311 பேரும், மே 6-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வை 9,55 139 பேரும், மே 10ஆம் தேதி 11 ஆம் வகுப்பு தேர்வை 8,85,053 பேரும் எழுத இருகின்றனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனிடையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் அடுத்த ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும் பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்:
பொதுத்தேர்வு எழுத போகும் மாணவ-மாணவிகள் காலணி மற்றும் பெல்ட் அணிந்து இருந்தால், அவற்றை தேர்வறைக்கு வெளியே கழற்றி வைத்து விட்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வெழுத இருப்பதாகவும், தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 மணிக்கு தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வருகை புரிய வேண்டும். 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும். 9.55 மணிக்கு வினாத்தாள் உறைகளை பிரித்தல் வேண்டும். 10 மணிக்கு வினாத்தாள் வழங்க வேண்டும். மேலும் 10 மணிக்கு கேள்வித்தாளை படிக்க வேண்டும். அத்துடன் 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். 10.15 மணிக்கு முகப்புச்சீட்டு சரிபார்த்து கையொப்பமிட வேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம். 1.10 மணிக்கு கூடுதல் விடைத்தாள்களை வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும். அதனை தொடர்ந்து 1.15 மணிக்கு தேர்வு நேரம் முடிவடைகிறது.