தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் எழுத உள்ளனர். மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தபட்டு 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று பொதுத்தேர்வு குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4ம் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படும்.
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். முதல் 15 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மாணவர்கள் கேள்வித்தாளை நன்றாக படித்து பார்த்து விடை எழுத வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில்,
- காப்பி அடித்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த இரண்டு முறை தேர்வு எழுத முடியாது.
- வினாத்தாளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- விடைத்தாளில் விடைகளை குறித்து அடுத்த மாணவருக்கு தந்தால் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.